பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் இருந்து, கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் குறித்த நேரத்தில், உரிய வழித்தடத்தில் செல்வதை உறுதிப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, 43 டவுன் பஸ்கள், குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன. ஆனால், மண்ணூர், ராமபட்டிணம் வழித்தடம், சூலக்கல் வழியாக கிணத்துக்கடவு வழித்தடம், மாக்கினாம்பட்டி வழியாக கஞ்சம்பட்டி வழித்தடம் உள்ளிட்ட, சில வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் பாதிக்கின்றனர்.அரசு பஸ்கள், குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த கிராமத்தை கடந்து செல்வதையும், உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதையும் துறை ரீதியான அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கிராம மக்கள் கூறியதாவது:பெரும்பாலும் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மிகவும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால், பழுதை காரணம் காட்டி, பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை.அடிக்கடி 'ட்ரிப் கட்' போன்ற பிரச்னைகள் உள்ளன. இதனால், கிராமங்களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். குறிப்பாக, காலை நேரத்தில் பஸ் இயக்கம் தடைபட்டால், பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கின்றனர்.அதன்பின், ஏதேனும் சரக்கு வாகனம் வாயிலாக பயணத்தை தொடர வேண்டியுள்ளது. கிராமங்களுக்கு உரிய நேரத்தில் அரசு பஸ் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.