| ADDED : ஆக 23, 2024 12:13 AM
கோவை;கோவை அரசு கலைக்கல்லுாரியில் பாதுகாப்பியல் கண்காட்சியில், மாணவர்கள் உருவாக்கிய போர் தளவாடங்கள், பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.கோவை அரசு கலைக் கல்லுாரியின் பாதுகாப்பியல் துறை சார்பில், 'டிபென்ஸ் எக்ஸ்போ' எனும் பாதுகாப்பியல் கண்காட்சி நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. சென்னை பல்கலையின் பாதுகாப்பியல் துறை தலைவர் உத்தம்குமார் ஜமதானி கண்காட்சியை துவக்கிவைத்து, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.இதில், போர் தளவாடங்கள், ஐ.என்.எஸ்., இம்பால், ஐ.என்.எஸ்., சென்னை, உள்ளிட்ட போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானம் தாங்கிகள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், 'எஸ்-400' வான் பாதுகாப்பு வாகனம் என, மாணவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஏவுகணை மாதிரிகளும் இடம்பெற்றுள்ளன. ஈரோடு கலைக் கல்லுாரி உட்பட பிற கல்லுாரி மாணவர்களும் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.இதில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு கலை கல்லுாரியின் பாதுகாப்பியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓய்வு பெற்ற கர்னல் ஜெயவேல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.கோவை அரசு கலைக் கல்லுாரி முதல்வர் எழிலி, அரசியல் அறிவியல் துறைத் தலைவர் கனகராஜ் உடனிருந்தனர்.