வால்பாறை:வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணியர் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில், வன வளம் பசுமையாக இருப்பதால், வனவிலங்குகள் அதிக அளவில் வெளியில் உலா வருகின்றன. குறிப்பாக, தாய்முடி, தோணிமுடி, ைஹபாரஸ்ட், ஊசிமலை, கருமலை உள்ளிட்ட எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இது தவிர, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகளவில் நடமாடுகின்றன.இந்நிலையில், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணியர், பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆபத்தை உணராமல், வனவிலங்குகள் நடமாடும் பகுதிக்குள் அத்துமீறி செல்வதால், பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது.இதனிடையே, தங்கும் விடுதியில் இருந்து, வனவிலங்குகளை நேரில் காணலாம் எனக்கூறி சுற்றுலாபயணியரை, சிலர் அழைத்து சென்று பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் வனவிலங்குகளின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், வனவிலங்குகள் நடமாடும் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். ரோட்டில் நடமாடும் வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.வால்பாறையில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி உணவு சாப்பிடக்கூடாது. தங்கும் விடுதிகளில் இருந்து, இரவு நேரத்தில் சுற்றுலா பயணியர் வனத்துக்குள் அத்துமீறி அழைத்து சென்றால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, தங்கும்விடுதி உரிமையாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்படும். வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புத்தர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.