| ADDED : மே 06, 2024 10:40 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அருகே, தாமரைக்குளத்தில் உள்ள ஒரு பகுதி மக்களுக்கு, மூன்று மாதங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாததால் தவிக்கின்றனர்.கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி தாமரைக்குளம், 1வது வார்டில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன், புதிதாக, 30 புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதில், 10 புதிய இணைப்புகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால், மூன்று மாதங்களாக மக்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர்.இதை சரி செய்யும் விதமாக, பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் வால்வில் வரும் கசிவு நீரை வைத்து சமாளிக்கின்றனர். சிலர், தண்ணீரை காசு குடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர்.இங்கு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது, ஒரு சில வீடுகளின் பழைய குழாய் இணைப்பு பாதிக்கப்பட்டது. அதுவும் தற்போது வரை சரியாகவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, 1வது வார்டு மக்கள் கூறுகையில், 'தண்ணீர் பிரச்னை குறித்து பல முறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், குழாய் பதிக்க பணம் இல்லை என கூறுகின்றனர். தண்ணீர் இல்லாமல் எப்படி வாழ்வது என கேட்டால், அதற்கு முறையான பதில் அளிக்க மறுக்கின்றனர்,' என்றனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தண்ணீர் பிரச்னையை இன்னும் மூன்று நாட்களில் சரி செய்து விடுவோம்,' என்றனர்.