கோவை;இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் மற்றும் கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில், 'மரம் வளர்ப்பு மற்றும் மேம்பாடு' என்ற, தேசிய அளவிலான பயிலரங்கம், சிங்காநல்லுார் ரோடு ஓ பை தாமரா ஹோட்டலில் நடந்தது. இப்பயிலரங்கை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் ஸ்ரீ கீர்த்தி வர்தன் சிங் துவக்கி வைத்தார். இதில், அவர் பேசியதாவது: விவசாய நிலம் தொடர்ந்து பிரிக்கப்பட்டு, பரப்பளவு குறைந்து வருகிறது. பயன்பாடு இன்றி உள்ள நிலம் அனைத்தும் தேசிய இழப்பாகவே கருதப்படும். விவசாயத்தில் ஈடுபடவில்லை எனினும், பயன்படுத்தாமல் நிலம் வீணாவதை தடுக்க, மரங்களை நடலாம். இதனால், நில உரிமையாளருக்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும். பருவநிலை மாற்றம், உலகளவில் பெரும் சவால். ஆராய்ச்சிகள் அதிகம் தேவை. தட்ப வெப்பநிலையை கருத்தில் கொண்டு, புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டும். சான்றிதழ் பெறுவதுடன் முடிவு பெறாமல், ஆராய்ச்சிகள் வணிகமயமாக்கப்பட வேண்டும். விவசாயம், சுற்றுச்சூழல் மட்டுமின்றி அனைத்து அறிவியல் துறைகளிலும் ஆராய்ச்சிகள் அவசியம். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்வில், மர வளர்ப்பில் சாதித்த விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். மரம் வளர்ப்பு மேம்பாடு குறித்த விழா மலர் வெளியிடப்பட்டது. மரம் வளர்ப்பு, இனப்பெருக்கம், வறட்சியை தாங்கும் ரகங்கள், எதிர்கால சவால்கள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர். துவக்கவிழா நிகழ்வில், ஐ.சி.எப்.ஆர்.இ., இயக்குனர் காஞ்சன் தேவி, ஐ.எப்.ஜி.டி.பி., குஞ்சிகண்ணன், வனத்துறை அதிகாரிகள், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பலர் பங்கேற்றனர்.