கோவை: அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் வனவிலங்கு - மனித மோதல் தடுக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, வனத்துறை அறிவுறுத்தலின் பேரில், திட்டமிடப்பட்டுள்ளன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அண்ணா பல்கலை மண்டல வளாகம். மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது, யானை, மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வந்து செல்வது இயல்பு. சமீபத்தில், பாரதியார் பல்கலை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத் தக்கது. அதை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள கல்விநிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட வனத்துறையால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து, அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து, டீன் சரவணக்குமார் கூறியதாவது: கடந்த, 2015ம் ஆண்டு முதல் மண்டல வளாகம் இங்கு செயல்படுகிறது. வனவிலங்கு-மனித மோதல் தடுக்கும் வகையில், வனத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம். அவர்களின் அறிவுறுத்தல் படி, வளாகம் முழுமையும் வெளிச்சமாக வைக்க, 17 லட்சம் ரூபாயில், சோலார் விளக்குகள் விரைவில் அமைக்கப்படவுள்ளது.வளாகத்தை சுற்றி, ரோந்து செல்வதற்கு வனத்துறை வாகனம் போன்று விளக்குகள் பொருத்தப்பட்ட ஜீப், சென்னையில் இருந்து பெற்றுள்ளோம். தவிர, பல்கலை சுற்றி அகழி அமைப்பது குறித்தும், அல்லது மலை அடிவாரத்தில் ஒருங்கிணைந்து பொதுவான அகழி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. யானை போன்ற வனவிலங்குகள் வருவது குறித்து, வனத்துறை தெரிவித்தவுடன் மாணவர்கள் விடுதியில் அலாரம் வாயிலாக 'அலர்ட்' செய்து விடுவோம். யாரும் தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.