| ADDED : மே 02, 2024 11:07 PM
அன்னுார்;அன்னுாரில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த கோரி பெற்றோர் 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.பொன்னே கவுண்டன் புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, எட்டு கி.மீ., தொலைவில் உள்ள கோவில்பாளையம் அல்லது வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.அங்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலான மாணவியர் பத்தாம் வகுப்பு உடன் படிப்பை நிறுத்திக் கொள்கின்றனர்.இதுகுறித்து பொன்னே கவுண்டன் புதூர் மக்கள் கூறுகையில்,' முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித் துறை அமைச்சருக்கு பலமுறை இப்பள்ளியை தரம் உயர்த்த கோரி மனு அனுப்பி உள்ளோம். அதற்கான வைப்பு தொகையும் செலுத்துவதாக கூறியுள்ளோம். எனினும் பள்ளி தரம் உயர்த்தப்படாமல் உள்ளது,' என்றனர். இதேபோல் கஞ்சப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மாணவ, மாணவியர் ஒன்பதாம் வகுப்புக்கு ஏழு கி.மீ., தொலைவில் உள்ள அன்னுார் செல்ல வேண்டி உள்ளது. எனவே கஞ்சப்பள்ளி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.இப்பள்ளியை தரம் உயர்த்தினால் கஞ்சப்பள்ளி மற்றும் அல்லப் பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் பயன்பெறுவர். பள்ளியில் இடைநிற்றல் தவிர்க்கப்படும்.இதே போல் எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளி, செல்லப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி, பிள்ளையப்பம் பாளையம் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றையும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.