லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே 16 ஆக்கிரமிப்பு வீடுகள் தரைமட்டம்
உக்கடம்: உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகே, உபகோயிலான வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமாக 29 சென்ட் இடம் இருக்கிறது. அவ்விடத்தை ஆக்கிரமித்து பலரும் வீடு கட்டி, பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். மொத்தம் 16 வீடுகள் இருந்தன. இது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. நிலம் யாருக்கு சொந்தம் என்பதை இந்து சமய அறநிலையத்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்ததால், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவ்வீடுகளுக்கு வழங்கிய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த 6ம் தேதி (சனிக்கிழமை) மின் இணைப்பு துண்டிக்க அலுவலர்கள் சென்றனர். அங்கு வசிப்பவர்கள் அவகாசம் கோரியதால் திரும்பினர். அங்கு வசித்தவர்கள் இரு நாட்களாக பல தரப்பிலும் முறையிட்டும், கோர்ட் உத்தரவால் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை. இதையடுத்து, அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் விஜயலட்சுமி, உதவி ஆணையர் கைலாஷ், லட்சுமி நரசிம்மர் கோயில் செயல் அலுவலர் ஜெயசெல்வம் தலைமையிலான அலுவலர்கள் மற்றம் போலீசார், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர். வீட்டில் இருந்த பொருட்களை குடியிருந்தவர்கள் தாமாக முன்வந்து அகற்றினர். கதவு, ஜன்னல் போன்றவற்றை பத்திரமாக எடுத்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதும் பொக்லைன் இயந்திரங்களால், 16 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 29 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.