டான்டீயில் 20 சதவீத போனஸ் தனியார் தொழிலாளர்கள் விரக்தி
வால்பாறை; 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, அரசு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவித்ததால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை (சின்கோனா), நீலகிரி, கூடலுார், குன்னுார், சேரம்பாடி உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசுக்கு சொந்தமான 'டான்டீ' தேயிலை தோட்டம் உள்ளது.இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை.இதனையடுத்து, சின்கோனா தொழிலாளர்கள், 'டான்டீ' அலுவகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு நேற்று முன்தினம், 20 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிட்டது. இதனால் டான்டீ தோழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில், வாட்டர்பால்ஸ் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. பிற எஸ்டேட்களில் பணிபுரியும் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டுள்ளது.நஷ்டத்தில் இயங்கும் டான்டீ நிர்வாகம், 20 சதவீதம் போனஸ் வழங்கியுள்ள நிலையில், நல்ல லாபத்தில் இயங்கும் தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் மிகக்குறைவான போனஸ் வழங்கியிருப்பது, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்துள்ளது.