வேலை நிறுத்தத்தால் 33 ரேஷன் கடைகள் மூடல்
அன்னுார்:25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அன்னுார் தாலுகாவில், 95 சதவீத ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன. 23 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவில்லை. சங்கங்களை வகைப்பாடு செய்யாமல், அனைத்து சங்க பணியாளர்களுக்கும் 2023 மார்ச் மாதம் பெற்ற சம்பளத்தில் 20 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு விரைவில் நிதிப் பயன் வழங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் பென்ஷனை 5,000 ஆக உயர்த்த வேண்டும். சங்கங்களுக்கு அரசு தரவேண்டிய ஏழு சதவீத வட்டி பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும். பதவி உயர்வில் அனைவ ருக்கும் சம வாய்ப்பு தரும்படி மாவட்ட அளவில் பணி மூப்பு பட்டியல் தயார் செய்து அதன் அடிப்படையில் மட்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும். சங்கங்களுடன் இணைந்துள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தி அக். 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இதன்படி அன்னுார் வட்டாரத்தில் 17, எஸ்.எஸ். குளம் வட்டாரத்தில் 6, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் நேற்று மூடப்பட்டிருந்தன. 33 ரேஷன் கடைகள் செயல்படவில்லை. வங்கி சேவைக்காக கூட்டுறவு சங்கங்களுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.