சூலுார் பகுதியில் 45 மி.மீ.மழை
சூலுார்; சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவில், 45 மி.மீ. மழை பெய்தது. சூலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, லேசாக பெய்ய துவங்கிய மழை, நள்ளிரவில் கனமழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மார்க்கெட் ரோடு, ரயில்வே பீடர் ரோடுகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீரும், மழை நீரும் சேர்ந்து பல இடங்களில் தேங்கி நின்றது. தாலுகா அலுவலக நுழைவாயில் முன், கழிவு நீர் தேங்கியதால், அந்த இடம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால், நேற்று அலுவலகத்துக்குள் செல்ல மக்கள் அவதிப்பட்டனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. மழையால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். * மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை முதல், வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. 2:45 மணி வரை, 45 நிமிடம் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இதேபோன்று சிறுமுகையில் கனமழையும், காரமடையில் மிதமான மழையும் பெய்தது.