கோவை:கோவை, அவிநாசி ரோடு, லட்சுமி மில் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு, வடவள்ளியை சேர்ந்த ஜெகன் பழனிசாமி, கிளை துணை மேலாளராகவும், நிவேதா மற்றும் ஷேக் அஷ்ரப் ஆகியோர் காசாளராகவும் பணிபுரிந்தனர். டிபாசிட்
இவர்கள், தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் கென்னடி, ஹரிகிருஷ்ணன், குலோத்துங்கன் உட்பட, 13 பேரை தொடர்பு கொண்டனர்.அப்போது, தங்கள் வங்கியில் இருந்து அவர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை டிபாசிட் செய்து தருவதாகவும், அந்த பணத்தை தங்களுக்கு எடுத்து தந்தால், நல்ல கமிஷன் தொகை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அதற்கு ஒப்புக்கொண்ட அவர்கள், கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு தங்கள் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை, அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தனர். இவ்வாறு ஜெகன் பழனிசாமி ஓராண்டாக செய்து வந்தார். இந்நிலையில், வங்கி நிர்வாகம், வங்கியின் வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது, 7.33 கோடி ரூபாய் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெகன் பழனிசாமியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர் விசாரணையில், அவர், காசாளர்களுடன் சேர்ந்து வங்கி பணத்தை மோசடியாக, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு டிபாசிட் செய்திருந்தது தெரிந்தது. சேகரிப்பு
வங்கியின் மார்க்கெட்டிங் தலைவர் முகமது ஜியாவுதீன், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து ஜெகன் பழனிசாமி, 38, நிவேதா, 34, ஷேக் அஷ்ரப், 38 மற்றும் வாடிக்கையாளர்கள் மூவரை கைது செய்தனர்.மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள், 10 பேரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.