சர்வதேச ஆணழகன் போட்டியில் இரு பதக்கம் வென்ற கோவை வீரர்
கோவை : தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஆணழகன் போட்டியில், கோவையை சேர்ந்த வீரர் இரண்டு பதக்கங்களை வென்றார்.'யுனைடெட் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் பிட்னஸ் பெடரேஷன்' சார்பில் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட, 13 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.இந்தியாவிலிருந்து கோவையைச் சேர்ந்த தர்மதுரை மற்றும் பெங்களூரில் இருந்து மேலும் ஒருவரும் போட்டியில் பங்கேற்றனர். இதில் தர்மதுரை இரண்டு பதக்கங்களை வென்றார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தர்மதுரை நிருபர்களிடம் கூறுகையில் ''தாய்லாந்தில் நடந்த இந்த ஆணழகன் போட்டியில் கடுமையான பல சுற்றுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல்வேறு வகைகளில் உடற்கட்டை நிரூபிக்க வேண்டியிருந்தது. இதில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உடன் நலத்துக்குப் பின் தான் செல்வம் எல்லாம். உடல் நலனை பாதுகாக்க தினமும் குறைந்தது 45 நிமிடம் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள்,'' என்றார்.