மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். தேரோட்டத்துக்கு தயாராகி வருகிறது.பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு, வளாகத்தில் அமரும் போது, பக்தர்களை வியக்க வைக்கிறது தேரோட்டத்துக்கான அலங்காரப் பணி. தேரோட்டத்தில், பார்வையாளர்களை வியக்க வைக்கும் இப்பணியில், சிவகங்கை மாவட்டம், பாகனேரியை சேர்ந்த எட்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில் அப்படி ஒரு நுணுக்கம். ''விரதம் இருந்து கோவில் தேர் அலங்கார வேலைகளை செய்து வருகிறோம். ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே, இது மாதிரியான வேலைகள் இருக்கும். மீதமுள்ள ஆறு மாதங்கள், கிடைக்கும் கூலிக்கு செல்வோம்,'' என்கின்றனர், இப்பணியில் ஈடுபட்டு வரும் பழனியப்பன், ஆறுமுகம், நாகநாதன் ஆகியோர். அவர்கள் சொல்லக்கேட்டோம்...
யாக சாலை அலங்காரம், தேர் அலங்காரம் ஆகிய பணிகள், எங்களின் முழு நேர பணி. கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தேர் அலங்கார வேலைகளில் ஈடுபடும்போது, விரதம் இருந்து பணிகள் மேற்கொள்வோம்.ஒவ்வொரு ஊரின் தேருக்கும், ஒரு பாரம்பரியம் இருக்கும். அந்த பாரம்பரியம் மாறாமல் அலங்கார வேலைகளை கச்சிதமாக முடிக்க வேண்டும். தை மாதம் துவங்கி, ஆனி மாதம் வரை, ஆறு மாதங்களுக்கு, கோவில்களில் அலங்கார வேலைகள் இருக்கும். மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு, கிடைக்கின்ற கூலி வேலைக்கு செல்வோம். சிலர் கடைகள் வைத்துள்ளனர். ஆனால், இத்தொழிலை நம்பி, 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் சுற்றியும் கட்டும் கொடுங்கைகளுக்கு, அலங்காரம் செய்யும் பணிகள் முடிந்துள்ளன. தேரின் உச்சியில் வைக்கப்படும் மகுடத்துக்கு அலங்காரப் பணிகள் நடந்து வருகிறது. தேர் சுற்றி அலங்கார கொடுங்கைகள் கட்டி, உச்சியில் மகுடத்தை ஏற்றி வைப்பது எங்கள் பணியாகும். அலங்கார வேலைப்பாடுகள் சேதமடையாமல், மகுடத்தை ஏற்றுவது தான் கஷ்டமான வேலையாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.