உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!

லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!

நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; பணிகள் விரைவில் துவங்கும்

கோ வை மாநகராட்சி மேற்கு மண்டலம், 41வது வார்டில் மருதமலை பிரதான சாலையையொட்டிய பி.என். புதுார், லிங்கனுார், ராம்ஸ் நகர், ஐஸ்வர்யா நகர், முல்லை நகர், தாகூர் வீதி, வீரமாச்சியம்மன் கோவில் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மருதமலை சாலையில் எப்பொழுதும் போக்குவரத்துக்கு பஞ்சம் இருக்காது. இங்குள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லிங்கனுார் பகுதியில் உள்ள பழைய தரைப்பாலத்தை விரிவுபடுத்தி தீர்வுகாண வேண்டும். லிங்கனுார், தாகூர் வீதி, புதுக்கிணறு வீதிகளில் யு.ஜி.டி. திட்டம் அமல்படுத்துதல் ஆகியன அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இணைப்பு சாலை தேவை

ஐஸ்வர்யா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கோபாலன்: ஐஸ்வர்யா நகரில் இருந்து மருதமலை மெயின் ரோடு செல்லும் ரோடு மிகவும் குறுகியதாக(10 அடி) இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விவேகானந்தா நகர், பொன்னுசாமி நகர், சிவா நகர் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் ஐஸ்வர்யா நகர் ரோட்டை இணைக்க வேண்டும். நில ஆர்ஜிதம் செய்து இணைப்பு சாலை அமைத்தால் நெரிசல் ஏற்படாது.

பாலம் விரிவு

தேவராஜ் (ஆன்மிகவாதி): மருதமலை ரோடானது பண்டிகை, திருவிழா காலங்களில் போக்குவரத்து மிக்க பகுதியாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் பழைய மருதமலை ரோட்டில்(லிங்கனுார்) தரைப்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இக்குறுகிய பாலத்தை விரிவுபடுத்தினால், மருதமலை திருவிழா காலங்களில் பிரதான சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, இந்த தரைப்பாலத்தை மாற்று பாதையாக பயன்படுத்த முடியும். முல்லை நகர், வக்கீல்கள் காலனி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் இப்பாலத்தை விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தரம் உயர்த்தணும்!

பாபு(சுயதொழில்): பி.என். புதுார் மாநகராட்சி உயர்நிலை பள்ளி மட்டுமே இங்குள்ளவர்களுக்கு மிக அருகே இருக்கிறது. இப்பள்ளி ஆரம்பப் பள்ளியாக இருந்து நடுநிலை பள்ளியாகவும், கடந்த, 1999ல் உயர்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. நல்ல தேர்ச்சி விகிதம் உள்ள இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துவருகிறோம். இந்த பள்ளியை விட்டால், வடவள்ளி அரசுப் பள்ளி, மருதமலை தேவஸ்தானம் பள்ளிக்குதான் செல்ல வேண்டும். தனியார் பள்ளிகள்கூட இங்கு கிடையாது. இந்த மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்தினால் பலர் பயன்பெறுவர்.

துர்நாற்றம்

ரதிதேவி(இல்லத்தரசி): மருதமலை மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் முதல் லிங்கனுார் தரைப்பாலம் வரையிலான பிரதான சாக்கடை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி ஆங்காங்கே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. நோய் பாதிப்புள்ள நிலையில் இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும்.

ஆக்கிரமிப்பு

நாகராஜ் (ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி): பைமெட்டல் ரோட்டில் இருந்து இரு கோவில்கள், பொது கழிப்பிடத்தை தாண்டிய பிறகு நான்கு முக்கு ரோடு வருகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்த வேண்டும். தனியார் இடம் இருந்தாலும் மாநகராட்சி நிர்வாகம் பேசி இடத்தை வாங்கி விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுகிய அந்த பாதையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரிப்பதுடன், விபத்தும் அதிகரிக்கிறது.

90 சதவீத பணிகள்!

வார்டு கவுன்சிலர் சாந்தியிடம்(இ.கம்யூ.,) கேட்டபோது... ஐஸ்வர்யா நகர் முதல் மருதமலை ரோடு வரை திட்ட சாலை அமைக்க, ரோட்டுக்கு இணையாக உள்ள விவேகானந்தர் வீதியில் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறோம். மாநகராட்சி பள்ளியில் இந்தாண்டு எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட்டு, 50 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ஆய்வகம் உள்ளிட்டவற்றுக்கு இடவசதி தேவைப்படுகிறது. இதற்கென மாநகராட்சியிடம் முறையிட்டுள்ளேன். லிங்கனுார் தரைப்பாலம் விரிவுபடுத்த கடந்த 'பட்ஜெட்' கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; பணிகள் விரைவில் துவங்கும். பைமெட்டல் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றவும், ரோட்டை அகலப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன். ரோடு அகலமானால், நான்கு கார்னர் ரோட்டில் போக்குவரத்து சிரமமின்றி வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். நான் கவுன்சிலரான துவக்கத்தில் ஒரு வாரம், 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்தது; பல பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 3.5 ஆண்டுகளில் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, 24 மணி நேர குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ரோடு பணிகளும், 95 சதவீதம் முடிவடைந்துவிட்டன. பழனியப்பா நகர், கருப்பாத்தாள் லே-அவுட் பகுதிகளில் மீதம் இருக்கும், 5 சதவீத பணிகள் துவங்கவுள்ளன. சென்னிமலை ஆண்டவர் நகரில் பல ஆண்டுகளாகவே, 60 அடி மண் ரோடு மட்டுமே இருந்தது. இதற்கு தார் ரோடு போட்டு தந்துள்ளேன். லிங்கனுார் பகுதியில் மழைநீர் தேக்கம் பிரச்னைக்கு தீர்வு தரப்பட்டுள்ளது. பி.என்., புதுார் மாநகராட்சி பள்ளி ரூ.48 லட்சத்தில் புதுப்பித்தல் பணி நடக்கிறது. தியாகி குமரன் வீதியில், 40 ஆண்டுக்கும் மேலாக மோசமாக இருந்த அங்கன்வாடி மைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பி.என்., புதுார் பஸ் ஸ்டாண்ட் அருகே நுாலகத்துக்கு இணைப்பு கட்டடம், புதுக்கிணறு ரோடு, பொது கழிப்பிடம் அருகே ரேஷன் கடை கட்டித்தரப்பட்டுள்ளது. மருதமலை ரோடு முதல் புரியமரம் ஸ்டாப் வரை மோசமாக உள்ள ரோட்டை புதுப்பிக்குமாறு நெடுஞ்சாலை துறையினரிடம் போராடிவருகிறோம். இப்பணிகளும் முடிந்தால் எனது வார்டில், 90 சதவீதம் பணிகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ