மாநில கொள்முதலுக்கு தனியாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும்! ஜெம் பாரபட்சத்தால் தொழில்துறை கோரிக்கை
கோவை: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய, அரசின் மின்னணு சந்தையான, 'ஜெம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் தேவையற்ற நிபந்தனைகளுடன், பாரபட்சம் காட்டப்படுவதாக, கோவை தொழில்முனைவோர் புகார் தெரிவித்துள்ளனர். தொழில்முனைவோர் கூறியதாவது:
ஜெம் தளத்தில் ஒரு சேவையை விற்பனை செய்ய, நடைமுறை சிக்கல்கள் அதிகம் இல்லை. ஆனால், ஒரு பொருளை விற்பனை செய்வதாக இருந்தால் தேவையற்ற சிக்கல்கள் வருகின்றன. உதாரணமாக, ஆர்.ஓ., பிளான்ட் விற்பனை செய்ய, 'வெண்டார் அசெஸ்மென்ட்'டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அசெஸ்மென்ட் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டம், டெஸ்க்டாப் அசெஸ்மென்ட். இதில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த தயாரிப்புப் பொருளுக்கு சற்றும் தொடர்பே இல்லாத, ஆய்வக பரிசோதனை அறிக்கைகளை கேட்பார்கள். ஒரே சமயத்தில் ஆவணங்களைக் கேட்காமல், தவணைகளில் கேட்பார்கள். மொழி ஒரு பிரச்னை அடுத்து வீடியோ வெண்டார் அசெஸ்மென்ட். இது ஒரு மணி நேரம் நடக்கும். வீடியோ காலில் வரும் அதிகாரிக்கு, உடைந்த ஆங்கிலம் அல்லது ஹிந்தி மட்டும்தான் தெரியும். அதிகாரியின் உடைந்த ஆங்கிலத்தை நாம் புரிந்து கொண்டாலும், நாம் சொல்வதை அவரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. வீடியோ காலில் வரும் அலுவலர் நம் தொழிற்சாலை, பணிபுரியும் நபர்கள் என அனைத்தும் பார்ப்பார்கள். அடுத்து, ஒரு ஆர்.ஓ. பிளான்ட் தயாரிப்பதை வீடியோ காலிலேயே செய்து காட்டச் சொல்வர். மூலப்பொருளை எடுத்து வருவதில் இருந்து, உருமாற்றி வடிவம் செய்து, அதைப் பொருத்தி, இயக்கிக் காட்ட வேண்டும். இதை வெறும் ஒரு மணி நேரத்தில் எப்படி செய்து காட்டுவது? இதுவே, வட இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்தாலும், இடைத்தரகர் வாயிலாக விண்ணப்பித்தாலும், உடனே கிடைக்கிறது. நமக்கு முன்னுரிமை தேவை உற்பத்தித் துறையில் தமிழகத்தை விடவா மற்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன? அப்படியிருக்க, தமிழகத்துக்கு ஏன் முன்னுரிமை கிடைப்பதில்லை? நாம் இங்கு தயாரிக்கும் அதே பொருளை, வட மாநில நிறுவனங்கள் பல மடங்கு கூடுதல் விலைக்கு, ஜெம் ஒப்பந்தம் வாயிலாக விற்றுவிடுகின்றன. நமக்கு பாரபட்சம் காட்டப்படுவதால், வர்த்தக வாய்ப்பை இழக்கிறோம். எனவே, தமிழக அரசு, தனது நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்ய, மாநில அளவிலான இணையதளத்தை உருவாக்க வேண்டும். இதை மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும். குறு, சிறு, நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜெம் தளத்தில் பதிவு செய்ய, மாநில அரசு தரப்பில் ஓர் உதவி மையம் அமைத்து, தேவையற்ற கெடுபிடிகளைக் களைந்து, நமது தொழில்முனைவோருக்கு உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வெளிப்படைத் தன்மை இல்லை
'முன்பு என்.ஐ.சி. தளத்தில் அரசுத் துறைகளுக்கு விண்ணப்பிப்போம். அதில், யார் யார் பங்கேற்கின்றனர், என்னென்ன ஆவணங்கள் இணைத்துள்ளனர் என விவரம் தெரியும். தகுதியற்ற ஒருவர் விண்ணப்பித்து இருந்தால், முறையிட முடியும். நமது புள்ளி நிராகரிக்கப்பட்டால், ஏன் என விளக்கம் பெற முடியும். ஜெம் தளத்தில் அப்படி இல்லை. யார், எங்கிருந்து விண்ணப்பிக்கிறார்கள் என தெரியாது. அவர்களின் ஆவணம் தெரியாது. ஏன் தேர்வு செய்தார்கள், நம்மை ஏன் நிராகரித்தார்கள் என்ற காரணம் இருக்காது. இதுகுறித்து விளக்கம்பெற தொடர்பு கொள்ளவும் முடியாது. தமிழக அரசும், இதே ஜெம் தளம் வாயிலாக கொள்முதல் செய்கிறது. வட மாநிலத்தவர் ஒருவர் இங்கு கிளை அலுவலகம் இல்லாவிட்டாலும், தனது பொருளை விற்றுவிடலாம். அதற்கு சர்வீஸ் தரமாட்டார். பொருத்திய ஒரு மாதத்துக்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியாது. நாமோ, 5 ஆண்டுகள் சர்வீஸ் வாரன்டி தருவோம்' என்றனர் தொழில்துறையினர்.