| ADDED : பிப் 07, 2024 11:08 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன், கழிவு நீர் தேக்கம் அடைந்துள்ளதால், அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள, நிறை குறைகள் மற்றும் பிரச்னைகளை ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டு சரி செய்து வருகின்றனர்.மேலும், ஊராட்சி சார்பில் இப்பகுதியில் கால்வாய், ரோடு போன்றவை கட்டி தரப்பட்டுள்ளது. இப்படியிருக்க, ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது, ரோட்டில் வழிந்தோடி ஊராட்சி அலுவலகம் முன்பாக தேங்கி நிற்கிறது.இதனால், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பணிகளுக்கு ஊராட்சி அலுவலகம் வரும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும், ஊராட்சி அலுவலகத்தின் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அவர்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.ஊர் முழுக்க சுகாதாரம் குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால், ஊராட்சி அலுவலகம் முன்பாக, நோய் தொற்று ஏற்படும் வகையில் கழிவு நீர் தேக்கி அவலமாக இருப்பதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இங்கு புதிதாக கால்வாய் அமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்காமல் சுத்தப்படுத்த வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.