தொண்டாமுத்தூர்;கோவையில், ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை, வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர், 15 மணி நேரத்திற்கும் மேல் போராடினர்.கோவை மாவட்டம், மதுக்கரை அய்யாசாமி கோவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள, கரடிமடை பகுதியில், அடிக்கடி சேதம் ஏற்படுத்தி வந்த ஒற்றை காட்டு யானை, நான்கு நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தாக்கியது. காயங்களுடன் மூதாட்டி தப்பினார்.அந்த காட்டு யானை, நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி, சிறுவாணி ரோட்டை கடந்து, கீழ்சித்திரை சாவடி பகுதி வழியாக, வேடபட்டியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.தகவல் அறிந்த வனத்துறையினர், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினருக்கு போக்கு காண்பித்த யானை, காலை 8:00 மணிக்கு, பேரூர் நொய்யல் ஆற்றுக்கு வந்தது.9:00 மணிக்கு, சிறுவாணி மெயின்ரோட்டை கடந்து, பேரூர் பெரியகுளத்தின் அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால், ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.பகல், 12:20 மணிக்கு, தோட்டத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை, பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குட்டை பகுதிக்கு வந்தது.அங்கிருந்து கங்கநாராயண சமுத்திரம் வழியாக, பச்சாபாளையம் ஆவின் அருகில் உள்ள, முள் காட்டிற்குள் புகுந்தது. அங்கு சில மணி நேரம் முகாமிட்டது. மாலையில், போஸ்டல் காலனி பகுதியில் உள்ள புதருக்குள் இரவு 7:30 மணி வரை பதுங்கியது.பின், சிறுவாணி மெயின்ரோட்டை கடந்து, வனப்பகுதிக்குள் சென்றது. யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட, 20 போலீசார் மற்றும் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
முதியவர் காயம்
பேரூர் பகுதியில் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பேரூர் செட்டிபாளையம், கிருஷ்ணசாமி நாயுடு வீதியைச் சேர்ந்த மருதமுத்து,66 என்பவரை தாக்கியது. காயமடைந்த அவரை, வனத்துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.