உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடிவெள்ளி விழா கோலாகலம்; கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிவெள்ளி விழா கோலாகலம்; கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை;ஆடி வெள்ளியில் அம்பிகையை வழிபட்டால், வீட்டில் மங்களம் உண்டாகும், திருமணமாகாத மகளிர் இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளை வழிபடுவதன் வாயிலாக வாழ்வில் மகிழ்ச்சியும், வளமையும் கிடைக்கும். அதனால் ஆடிவெள்ளியில் சுமங்கலிகள் விசேஷ விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆடி நான்காவது வெள்ளியை முன்னிட்டு, சென்னனுார் மாகாளியம்மன் மஹாலட்சுமியாக தாமரை வேதிகையில் அமர்ந்த நிலையில், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலையில் தானியங்களால் தயாரிக்கப்பட்ட கூழ் படைத்தும், மதியம் அறுசுவை விருந்து படைத்தும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டனர். ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் இளம்சிகப்பு மற்றும் காவிநிற பட்டாடையில் தங்ககவசத்தில், பல வண்ண மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தர்மராஜாகோயில் வீதியிலுள்ள காளியம்மன் கோயிலில் நவதானியங்கள், மாவிலை,வேப்பிலை மற்றும் நாகர்களுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் காட்சி அருளினார். கவுண்டர்மில் பகுதியிலுள்ள எல்லை மாகாளியம்மன் மஹாலட்சுமி அலங்காரத்திலும், கெம்பட்டி காலனி பண்ணாரி மாரியம்மன் வளையல் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். தடாகம் சாலை சக்தி முத்துமாரியம்மன் வளையல் மற்றும் நாகர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரியகடைவீதி கோனியம்மன், மாகாளியம்மன், அவிநாசி சாலை தண்டுமாரியம்மன் கோயல்களில் நேற்று, திரளான சுமங்கலிகள் மஞ்சள், குங்குமம் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அன்னுாரில் வழிபாடு அன்னூர் அருகே கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு நாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தில் உள்ள ஆதி சக்தி அம்மன் கோயிலில் நேற்று அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ