உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலாவதியான 21 அரசு பஸ்கள் உடைப்புக்கு அனுப்ப நடவடிக்கை

காலாவதியான 21 அரசு பஸ்கள் உடைப்புக்கு அனுப்ப நடவடிக்கை

பொள்ளாச்சி ; அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில், காலாவதியான 21 அரசு பஸ்கள், கழிவோடு சேர்க்கப்பட்டு, உடைக்கப்படவுள்ளது. அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி கிளை 1ல், 26 புறநகர் பஸ், 34 டவுன் பஸ்; கிளை 2ல், 32 புறநகர், 35 டவுன் பஸ்கள்; கிளை, 3ல், 28 புறநகர், 32 டவுன்பஸ்கள் என, தினமும், 187 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 15 ஆண்டுகள், 12 லட்சம் கி.மீ., துாரம் ஓடிய பஸ்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டு, அவை கழிவோடு சேர்க்கப்படுகிறது. அவ்வகையில், இம்மாதம், பணிமனை 1ல் 6 பஸ்கள், பணிமனை 2ல் 8 பஸ்கள், பணிமனை 3ல் 7 பஸ்கள் என, மொத்தம், 21 அரசு பஸ்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டு, கழிவோடு சேர்த்து உடைக்கப்படவுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: இயக்கத்தில் உள்ள சில பஸ்கள், நல்ல நிலையில் இருப்பதில்லை. பழுது ஏற்பட்டால், தேவையான உதிரிபாகங்கள் தருவிக்கப்படுகிறது. உரிய காலத்திற்கு பழுது நீக்கம் செய்து, பஸ்களை வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு இருந்தும், சில பஸ்கள், 15 ஆண்டுகளுக்கு முன்னரே, உறுதி தன்மையை இழந்து விடுகிறது. அந்த பஸ்களும் காலாவதி பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இம்மாதம், 15 ஆண்டுகளில், 12 லட்சம் கி.மீ., துாரம் ஓடிய பஸ்கள், 'ஐடியல்' (உடைப்புக்கு) அனுப்பப்படுகிறது. அதற்கு மாற்றாக, கோவையில் இருந்து, மாற்று பஸ்கள் எடுத்து வரப்பட்டு, வழித்தடத்தில் இயக்கப்படும். படிப்படியாக, பழைய பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதமும், 6 பஸ்கள், 'ஐடியல்' செய்யப்பட்டு, கழிவில் சேர்த்து உடைப்பு செய்யப்படவுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை