குப்பை கிடங்கு வழக்கு அக்., 16க்கு ஒத்திவைப்பு
கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், 98 பக்கத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கையை, கோவை மாநகராட்சி சமர்ப்பித்திருக்கிறது. இவ்வழக்கு அக்., 16க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வழக்கை விரைந்து நடத்தக்கோரி, மனுதாரர் மோகன் தரப்பில் முறையிட்டதால், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மனுதாரர் தரப்பிலும், மாசுக்கட்டுப்பாடு வாரியம் தரப்பிலும் ஆஜராகினர். மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.'குப்பையில் 'பயோ காஸ்' தயாரிக்கும் திட்டத்தை, வெள்ளலுாரில் செயல்படுத்தக் கூடாது. குப்பையை உருவாகும் இடத்திலேயே அழிக்க வேண்டும்; வெள்ளலுாருக்கு கொண்டு வரக்கூடாது. குப்பையை உரமாக்கும் மையங்கள் செயல்படவில்லை' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.மாநகராட்சி தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்காததால், ஏற்கனவே உத்தரவிட்டதன் அடிப்படையில், அக்., 16ல் வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.