பொள்ளாச்சி: நாட்டுச்சர்க்கரை, வெல்லம் தொடர்பான பொருட்கள் தயாரிப்பு குறித்து, அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில், பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்துகின்றனர். அதில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, அதிக விலைக்கு விற்றாலும் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனை மையப்படுத்தி, பல்வேறு பகுதிகளில், நாட்டுச் சர்க்கரை ஆலை அமைக்கப்பட்டுள்ளது. கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், சிலர், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு பெறாமலும், நாட்டுச் சர்க்கரையுடன் வெள்ளை சர்க்கரை கலந்து விற்கப்படுகிறது. கருப்பட்டி தயாரிப்பிலும் வெள்ளை சர்க்கரையை கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது: நாட்டுச் சர்க்கரையில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியம் கருதி பலரும், அதனை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை சாதமாக்கிக் கொண்டு, பல கடைகளிலும் நாட்டுச் சர்க்கரை, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை பொருட்கள் என விற்பனை செய்யப்படும் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், மண்டை வெல்லம், ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும். அதேபோல, நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி தொடர்பான பொருட்கள் தயாரிக்கப்படும் ஆலைகளில், கலப்படம் தவிர்க்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உரிமையாளர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.