நிதி ஆதாரம் வழங்க கோரி ஆழியாறு திட்டக்குழு மனு
பொள்ளாச்சி; ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யு றுத்தி, ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழுவினர், முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில், கால்வாய்கள் முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. அவ்வப்போது அனுமதி பெற்று நிதி ஒதுக்கி வேலைகள் செய்யப்படுகின்றன. இதனால், கால்வாய்களின் நிலை மோசமாக உள்ளது. நீர் இழப்பு ஏற்பட்டு கடைமடைக்கு நீர் கொண்டு சேர்க்க முடிவதில்லை. ஆழியாறு புதிய பாசனத்தில், 16 பாசன சபைகள் உள்ளன. இந்த பாசன சபைகள் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை பராமரிக்க போதிய நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும். பி.ஏ.பி., திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீர்வளத்துறையில் தொகுப்பூதியம் பெறும், 3,400 ஊழியர்களுக்கு பணி வரைமுறை செய்து நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.