அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
கோவை: கோவை அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் பேசியதாவது: கோவை அரசு கலைக்கல்லுாரி, 172 ஆண்டுகள் பழமையானது. இங்கு நான் 20 ஆண்டுகள் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி இருக்கிறேன். இந்த கல்லுாரி குறித்து பல பசுமையான நினைவுகள் எனக்கு உண்டு. இங்குள்ள முன்னாள் மாணவர்கள் சங்கம் 91 ஆண்டுகள் பழமையானது. ஆசிரியர்களை மதிக்கும் பண்புள்ளவர்கள் இந்த கல்லுாரி மாணவர்கள். முன்னாள் மாணவர் அமைப்பு எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு, முன் உதாரணமாக இக்கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம் செயல்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.மார்ட்டின் குழும நிறுவனர் லீமாரோஸ், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை மண்டல குடிமைப்பொருள் எஸ்.பி.,பாலாஜி சரவணன், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், கவிஞர் அவைநாயகன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.1500க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.