பொள்ளாச்சி';பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 13வது கொண்டைஊசி வளைவில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 15 தனியார் ஆம்புலன்ஸ்கள், இரண்டு '108' ஆம்புலன்ஸ்களும், வால்பாறை ரோட்டை நோக்கிச் சென்றன.'சைரன்' சப்தத்துடன் வரிசையாக ஆம்புலன்ஸ்கள் சென்றதால், அவ்வழியாக சென்றோர், மக்கள் பீதியடைந்தனர். விபத்துக்கு உள்ளானது தனியார் டூரீஸ்ட் வாகனமா அல்லது பஸ்சா என, போலீசாரும் விசாரணையை துவக்கினர்.காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்ததும் சிகிச்சை அளிக்க, டாக்டர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து, அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் போலீசார், இரவு நேரத்தில் அங்கு பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து இருக்கலாம் என, டார்ச்லைட் அடித்து தேடினர். நீண்ட நேரம் தேடி பார்த்தும், விபத்து நடந்தற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இதனால், போலீசார், ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். தகவல் பரவியது எப்படி?
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், 'உடுமலை தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தில் இருந்து தகவல் வந்தது. அதை உறுதி செய்ய அழைத்த போது, ஊட்டியில் உள்ள நபரின் மொபல்போன் எண்ணை கொடுத்தனர். அவரை தொடர்பு கொண்ட போது, வெள்ளக்கோவில் உள்ள நபரின் மொபைல்போன் எண்ணை கொடுத்தனர்.அதற்குள், 'போன் கட்' ஆனதால், நேரத்தை வீணடிக்க வேண்டாமென நினைத்து வேகமாக சென்றோம். அங்கு சென்று, சோதனைச்சாவடியில் வனத்துறையிடம் தகவல் தெரிவித்து சென்றோம்.மலைப்பாதைக்கு சென்று பார்த்தால் விபத்து ஏற்பட்டதற்கானஅறிகுறிகள் எதுவும் இல்லை. இந்த பொய்யான தகவலை பரப்பியவர் யார் என தெரியவில்லை. இந்த தகவலை யார் அனுப்பினர் என கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு மொபைல்போன் எண்ணை கொடுக்கின்றனர். இந்த செயலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதனால், மன உளைச்சல் ஏற்படுகிறது. உண்மையான சம்பவங்கள் நடக்கும் போதும் நம்ப முடியாத சூழல் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஆம்புலன்ஸ் டிரைவர்கள், போலீசார், வனத்துறையினர் என, அனைவரையும் வீணாக அலைகழித்த நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.