இரு வாரங்களாக போக்கு காட்டும் சிறுத்தை: கூடுதலாக நேற்றும் ஒரு கூண்டு வைப்பு
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, குப்பிச்சிபுதுார் பகுதிகளில் சுற்றி வரும் சிறுத்தையை பிடிக்கும் வரை, மாலை, 6:00 மணிக்கு மேல் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இருவாரங்களுக்கு முன், ஆனைமலை அருகே, குப்பிச்சிபுதுார் மேட்டுப்பதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையிலான வனக்குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ய மூன்று இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது. அதன் வாயிலாக, சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து, வெவ்வேறு இடங்களில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டன. அதில், உயிருடன் கோழியை தொங்க விட்டு, சிறுத்தையின் வருகையை எதிர்பார்த்து, வனக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால், சிறுத்தை, கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், பாசிபைத்தான்பாறை என்ற பகுதியில் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்தது. இதனால், கூடுதலாக ஒரு கூண்டு, நேற்று உடுமலையில் இருந்து தருவிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் உள்ள மேலும் ஒரு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதேநேரம், சிறுத்தை கூண்டுக்குள் சிக்கும் வரை, மாலை 6:00 மணிக்கு மேல் மக்கள் வெளியே நடமாட வேண்டாம், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'தோட்டம் சார்ந்த பகுதிகளில் கால்நடைகளை குறி வைத்து சிறுத்தை வலம் வருகிறது. இதனால், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், மாலை, 6:00 மணிக்கு மேல் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம். சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்,' என்றனர்.