சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு பாராட்டு
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தலைமை வகித்தார். கடந்த நிதியாண்டில் ரூ.6 கோடிக்கு குறைவாக, கடன் நிலுவையில் இருந்த 47 சங்கங்கள், தற்போது ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கி சாதனை புரிந்ததற்காக, நிதியாண்டில் தவணை தவறிய கடன்களை, 100 சதவீதம் வசூல் செய்ததற்காக, சங்க செயலாளர்களை பாராட்டி, இணைப்பதிவாளர் அழகிரி சான்றிதழ் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட செயலாட்சியர்களுக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்தும், வரும் நிதியாண்டில் கடன் நிலுவை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.கோவை சரக துணை பதிவாளர் விஜயகணேஷ், பொள்ளாச்சி சரக துணை பதிவாளர் சுவேதா, சுபாஷினி (பயிற்சி) மற்றும் மண்டல மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப்பதிவாளர் வடிவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ஆனந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.