உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல் மீது தாக்குதல்: ஆசிரியர் படுகொலை; இரு தரப்பினரும் போராட்டம்

வக்கீல் மீது தாக்குதல்: ஆசிரியர் படுகொலை; இரு தரப்பினரும் போராட்டம்

வக்கீல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே போன்று, ஆசிரியர் கொலையை கண்டித்து, ஆசிரியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டணம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தற்காலிக தமிழ் ஆசிரியர் ரமணி, பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்த சம்பவம், ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படுகொலையை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் இடைநிலை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்து வருகின்றனர்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார் மற்றும் மனோஜ் கூறியதாவது:பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு உள்ளதை போன்றே ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.ஆசிரியர்களின் பாதுகாப்பை, குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது இயக்கத்தின் கோரிக்கையாகும்.இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் எங்களது இயக்கம் சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.

உடுமலை

உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் இரங்கல் கூட்டம் நேற்று மாலை நடந்தது. ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தஞ்சாவூரில் இறந்த ஆசிரியருக்கு இரங்கல் தெரிவித்து குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். மேலும், இறந்த ஆசிரியருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, இரங்கல் கூட்டம் நடத்தினர்.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த வக்கீல் கண்ணன்,30, நடு ரோட்டில் வெட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.வக்கீல் சங்க தலைவர் கூறுகையில்,''டாக்டர், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் உள்ளது போல, வக்கீல்களுக்கும் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். சமீபகாலமாக வக்கீல்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடக்கிறது. எனவே, வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எந்த அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்காதது ஆதங்கமாக உள்ளது. வக்கீலை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். -- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை