மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் குளிர்ச்சியை இழந்த அவிநாசி சாலை
அன்னுார்; அன்னுார் நகரில், அவிநாசி சாலையில், அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டதால், குளிர்ச்சியை இழந்து காட்சியளிக்கிறது. அவிநாசிக்கு முன் உள்ள ஆட்டையாம்பாளையத்தில் துவங்கி, கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு தற்போதுள்ள இருவழிச் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் 255 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1,400 மரங்களை வெட்டி அகற்ற திட்டமிட்டுள்ளனர். வாய்ப்பு உள்ள மரங்கள் மறு நடவு செய்யப்படும். வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு ஈடாக 10 மடங்கு மரங்கள் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் வேறு பகுதியில் நடப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அன்னுார் நகரில் அவிநாசி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, நாகமாபுதூர், பனந்தோப்பு மயில் வழியாக சோமனுார் பிரிவு வரை சாலையின் தெற்கு பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது.நிழலுக்கு ஒதுங்கக் கூட ஒரு மரம் இல்லாமல் அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு விட்டன. இதனால் சாலையின் இரு புறமும் தலா 20 அடி இடைவெளியில் சோலைவனமாக காட்சி அளித்த அன்னுார் அவிநாசி சாலை குளிர்ச்சியை இழந்த சாலையாக காட்சியளிக்கிறது.இது குறித்து பசுமை ஆர்வலர்கள் கூறுகையில், 'சாலையின் மையப்பகுதியில் இருந்து இருபுறம் 28 அடி மட்டுமே புதிய சாலை அமைக்க திட்டமிட்டு பணி நடந்து வருகிறது. ஆனால் 40 அடிக்கு அடுத்து உள்ள மரங்களையும் வெட்டி அகற்றுகின்றனர்.சாலை அமைக்க அகற்ற தேவையில்லாத மரங்களும் அகற்றப்படுகிறது. கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மற்றும் பசுமை ஆர்வலர்கள் இணைந்த குழு இங்கு ஆய்வு செய்ய வேண்டும். அடுத்து உள்ள மரங்களையாவது வெட்டி அகற்றாமல் தடுக்க வேண்டும்,' என்றனர்.