உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறந்த கிடாரிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கல்

 சிறந்த கிடாரிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கல்

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அருகே, ஆண்டிபாளையம் கிராமத்தில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடைத்துறை சார்பில், கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகள் பராமரிப்பு வழிகாட்டுதல் வேண்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அருகே ஆண்டிபாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கள் சிவரஞ்சனி, லட்சுமணன், சத்யசீலன், உதவியாளர்கள் எட்வர்டு, ஆனந்தன் அடங்கிய குழுவினர் கால்நடைகளில் நோய் பாதிப்பை கண்டறிந்தனர். தொடர்ந்து, மலட்டுத்தன்மை நீக்கம், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சுண்டுவாதம், தடுப்பூசி போடுதல் என, கால்நடைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால், கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் பரிந்துரை செய்யும் மருத்துவ முறைகளை கையாள வேண்டும். மாட்டு தொழுவத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தற்போது பனிகாலம் நிலவுவதால், வெயில் நேரத்தில் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும், கால்நடைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. முடிவில், தாது உப்பு கலவை வழங்கப்பட்டதுடன், சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை