உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தேக்கம்; நீதிபதி காலியிடம் நிரப்ப வலியுறுத்தல்

கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தேக்கம்; நீதிபதி காலியிடம் நிரப்ப வலியுறுத்தல்

கோவை : கோவையிலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்குகள் தேக்கம் அடைவதால், நீதிபதி காலியிடம் நிரப்ப கோரி, மத்திய நிதியமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திடம், வாடிக்கையாளர்கள் பெறும் கடனை முறையாக திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில், வராக்கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவையில் கடன் வசூல் தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.,) செயல்பட்டு வருகிறது.தீர்ப்பாய நீதிபதி ஓய்வு பெற்றதால், கடந்த நான்கு மாதங்களாக நீதிபதி பணியிடம் காலியாக இருக்கிறது. மதுரை தீர்ப்பாய நீதிபதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொடர் விசாரணை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கோவையில், 14,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தினந்தோறும், 25க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதற்கிடையில், கோவைக்கு வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, கோவை கடன் வசூல் தீர்ப்பாய வக்கீல் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், 'கடன் தீர்ப்பாய வசூல் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், வழக்கு தேக்கம் அதிகரித்து வருகிறது. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை குறைக்க, உடனடியாக புதிய நீதிபதி நியமிக்க வேண்டும். கோவையில், கூடுதல் தீர்ப்பாயம் ஏற்படுத்தி, நீதிபதிகள் நியமிக்கப்படும் பட்சத்தில், நிலுவை வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும்.சென்னையில் மூன்று தீர்ப்பாயம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இரண்டு தீர்ப்பாயம் உள்ளது போல, கோவையிலும் கூடுதலாக ஒரு தீர்ப்பாயம் ஏற்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை