ரயில்வே கீழ்மட்ட பாலத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி சீனிவாசபுரத்தில், ரயில்வே கீழ்மட்ட பாலத்தின் ஓடுதளத்தில், பேட்ஜ் ஒர்க் பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், சீனிவாசபுரத்தில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலத்துறை இணைந்து, 26.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ் மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து கட்டியதாகும். கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. பொள்ளாச்சி - ஆனைமலை, திருச்சூர், சேத்துமடை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இந்த கீழ்மட்ட பாலம் வழியாக செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, பாலத்தின் ஓடுதளம் பெயர்ந்து, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் குழிகள் இருந்தன. இதுபோன்று குழியாக மாறி விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்பட்டது. எனவே, பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர், சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தற்போது பருவமழை இடைவெளி விட்டுள்ளதையடுத்து, பாலத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோடுகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள குழிகளில் பேட்ஜ் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக கீழ்மட்ட பாலத்தில் பணி, மேற்கொள்ளப்பட்டது,' என்றனர்.