விவசாயம் செய்யாத காலத்திற்கு குத்தகை வசூலிக்க தடை; பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்; பவானிசாகர் அணை யின் நீர் தேக்கப் பகுதிகளில், விவசாயம் செய்யாத காலத்திற்கு, குத்தகை வசூலிப்பதை, தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என, பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பவானிசாகர் அணையில் 100 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு வரை, பவானி ஆற்றில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப் பரப்பில் தண்ணீர் தேங்கி இருக்கும். அணையில் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில், பொதுப்பணித்துறையின் அனுமதியின் பேரில், விவசாயிகள் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர். பயிர் செய்யாத காலத்திற்கும், பொதுப்பணித்துறை நிர்வாகம், குத்தகை செலுத்தும்படி, விவசாயிகளுக்கு அறிவிப்பு விடுத்து வருகிறது. இதுகுறித்து, பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம் தாலுகா, பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீர் தேக்கம் குறையும்போது, 850 ஏக்கர் பரப்பளவில், 500 விவசாயிகள் பொதுப்பணித்துறை நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி, நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த, 2018ம் ஆண்டு முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக, அணையில் தண்ணீர் குறையவில்லை. அதனால் விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை, குத்தகையும் செலுத்தவில்லை. ஆனால் குத்தகை செலுத்தவில்லை என்றால், வேறு நபருக்கு குத்தகை ரசீது போட்டுக் கொடுத்து விடுவோம் என மிரட்டி, நீர்வளத்துறை அலுவலர்கள் விவசாயம் செய்யாத காலத்திற்கும் குத்தகை வசூலித்து வருகிறார்கள். விவசாயம் செய்யாத காலத்திற்கு, குத்தகை வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும், ஏக்கர் ஒன்றுக்கு, பத்து சதவீதம் குத்தகை உயர்வு என்பது மிக அதிகமானது. அதையும் சரிபாதியாக குறைக்க வேண்டும். தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.