| ADDED : பிப் 23, 2024 08:40 PM
நாய்களை வீட்டுச்சூழலில் வளர்க்கும் போது தவறான உணவுப்பழக்கம், சுற்றச்சூழல் பாதிப்புகளால் தோல் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உணவுமுறைகளை பொறுத்தவரை, மனிதர்கள் சாப்பிடும் உப்பு, சர்க்கரை, காரம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாய்க்கு கொடுக்கக்கூடாது. அவை தங்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பைகளில் இருந்து தான் உண்ணிகள் உருவாகும்.நாய்களின் தோல்வியாதிக்கு உண்ணிகள், பேன் பூச்சிகள், நுழையான்களே காரணம். இவை, முடிக்கு அடியில் தோலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும். தோல் சிவப்பாதல் பரு, சொரி, தடிப்பு ஏற்படுதல், முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் மூலம், தோல் நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். நாய்களை தாக்கும் சில பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம். மேலும் இதை கவனிக்காமல் இருந்தால், நாய்களுக்கு ரத்தசோகை ஏற்பட்டு, இறக்கவும் வாய்ப்புள்ளது.மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய கால இடைவெளியில் உண்ணி மருந்துகள் அளித்தல், குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். நாய்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மென்மையான சோப்பு, ஷாம்புகளை பயன்படுத்தி குளிப்பாட்டி விடுதல் அதன் முடியை சீவி விடுவது அவசியம். -பெருமாள்சாமி, மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, கோவை.