பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது
மேட்டுப்பாளையம் : பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் கட்டியுள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் கேரளாவிலும் கனமழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி அளவில் பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால், 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், வெகுவாக உயர்ந்து வந்தது. இரவு 11:30 மணிக்கு அணையில் நீர்மட்டம், முழு கொள்ளளவான, 97 அடியை எட்டியது. கடந்த, 24 மணி நேரத்தில், 11 அடி தண்ணீர் உயர்ந்து, அணை நிரம்பியது. பில்லூர் அணை நிரம்பி வழிந்ததால், அணைக்கு வந்த தண்ணீரை, அப்படியே மதகுகள் வழியாக, பவானி ஆற்றில் திறந்து விட்டனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று மதியம் அதிக பட்சமாக வினாடிக்கு, 16 ஆயிரத்து, 140 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து மதகுகள் மற்றும் மின் உற்பத்தி செய்ய, வருகின்ற தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி வருகின்றனர். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இரண்டாவது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வந்து கொண்டு இருப்பதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.