மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட, அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் அறிவழகன், சேலம் வரை நடந்து சென்று, சாலை ஓரங்களில், 49,000 விதைப்பந்துகளை விதைத்து, சாதனை புரிந்துள்ளார். மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில், கண்டக்டராக பணியாற்றி வருபவர் அறிவழகன். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரம் நடுவோம், மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், என்ற கருத்தை வலியுறுத்தி, மேட்டுப்பாளையத்தில் இருந்து, சேலம் வரை நடந்து சென்றார். வழி முழுவதும் 49,000 விதை பந்துகளை வீசி விதைத்து, புதிய சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு சேலத்தில் வரவேற்பு கொடுத்து, சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வந்த இவரை, டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், டாக்டர் மகேஸ்வரன், அரசு போக்குவரத்து கழக கிளை 1 மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் பாராட்டினர். இவர் நான்கு புதிய உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு முறையும் சாதனை செய்யும் போது, மழை நீர் சேகரிப்பு குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சமூகப் பணியிலும் ஆர்வம் உள்ள இவர், இதுவரை 37 முறை ரத்த தானம் செய்துள்ளார்.