நினைத்து, நினைத்து தாயுமானவர் திட்ட தேதி மாற்றம் : ஊழியர்களுக்கு சிரமம்; முதியவர்களுக்கு அவதி
கோவை: 'தாயுமானவர்' திட்டத்தில் பொருட்கள் வழங்க, ஒவ்வொரு மாதமும் தேதியை மாற்றி மாற்றி அறிவிப்பதால், கார்டுதாரர்களுக்கும், ரேஷன் பணியாளர்களுக்கும் சிரமம் ஏற்படுவதாக, தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யும், 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தில் பயன்பெறும் கார்டுதாரர்கள், 1.7 லட்சம் பேர் உள்ளனர். இதில், 85 ஆயிரத்து, 171 கார்டுதாரர்களின் வீடுகளுக்கே, ஒவ்வொரு மாதமும் வாகனங்களில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாதத்தில் இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் மூன்றாம் ஞாயிறுகளில், பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் முதல் 3, 4ம் தேதிகளில் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: இந்த திட்டம் துவக்கப்பட்டபோது, மாதத்தின் இரண்டாம் சனி, ஞாயிறு மற்றும் மூன்றாம் ஞாயிறு நாட்களில் வழங்க உத்தரவிட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் 5, 6ம் தேதிகளில் முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டனர். இந்த மாதம் முதல், வாரத்தில் 3, 4 ஆகிய தேதிகளில் பொருட்கள் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கார்டுதாரர்கள் இதனால் குழப்பம் அடைந்துள்ளனர். மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் விநியோகம் என அறிவிப்பு இருந்தால், அந்த தேதியில் கார்டுதாரர்கள் எங்கும் செல்லாமல் பொருட்களை வாங்கிக் கொள்ள வசதியாக இருக்கும். ஏற்கனவே அரசு முதலில் அறிவித்தபடி இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் மூன்றாவது ஞாயிறு என்று இருந்தால் கார்டுதாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் சிரமம் இருக்காது. நிலையான தேதியை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.