உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானைகளின் குணாதிசயத்தில் மாற்றம்! கும்கிகளாக மாற்றினால் வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி

காட்டு யானைகளின் குணாதிசயத்தில் மாற்றம்! கும்கிகளாக மாற்றினால் வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி

கோவை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என பிடிக்கப்படும் யானைகள், கராலில் அடைத்து அதன் குணத்தை மாற்றுவதால், வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆசியாவிலேயே யானைகள் ஒரே இடத்தில் கூடி வாழ்வது, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்த வனப்பகுதிகளில் தான். கடந்த 20 ஆண்டுகளாக யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ன. இவ்வழியே வரும் யானைகளுக்கு வழி தெரியாமல், குடியிருப்பு பகுதிகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ நுழைந்து விடுகின்றன. காடுகளில் வெட்டப்படும் மரங்கள், குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு, வேட்டையாடுதல் போன்ற செயல்களே, யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால், மனித - - விலங்கு மோதல் அதிகரித்து, வனம் ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களுக்கு தொந்தரவு என கருதும் யானைகள், 'கும்கி' உதவியுடன் பிடிக்கப்பட்டு, கராலில் அடைக்கப்பட்டு, அதன் குணாதிசயம் மாற்றப்படுகிறது. இதுவே தொடர்ந்தால், வனப்பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதுகுறித்து, நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறியதாவது: கரால்களில் அடைக்கப்பட்ட யானைகளுக்குப் பயிற்சி அளிப்பதால், அவற்றின் இயல்பை சாந்தமானதாக மாற்ற முடியும். மனித - - விலங்கு மோதல், வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும். வனத்தில் உணவுப் பற்றாக்குறை, போதிய நீர் இல்லாதது, அதன் வழிப்பாதைகள் தொடர் ஆக்கிரமிப்பு என இருக்கும் போது, இடமாறிப் போகும் சூழலில், விவசாய நிலங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. யானைகளின் குணாதிசயத்திலும் மாற்றம் ஏற்படுத்தி வருகிறோம். யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கும் போது மட்டுமே, அவை மனிதர்களை தாக்க துவங்குகின்றன. வனம் ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில், அதற்கு பிடித்த பயிர்களை விளைய செய்வதை கண்டறிந்து வந்து விடுகின்றன. பல்லுயிர் சூழல் பாதிக்காதவாறும், வனம் செழிப்பாக இருக்குமாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை வழித்தடத்தில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என கருதி, வனத்தில் பிடிக்கப்படும் யானைகளை 'கும்கி'களாக மாற்றினால், வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ