வட்டமலை ஆண்டவர் கோவிலில் நாளை தேரோட்டம்
அன்னுார்; குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நாளை (11ம் தேதி) நடக்கிறது. குமாரபாளையத்தில் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவிலில் 16ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 6ம் தேதி காலை கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. கடந்த 7ம் தேதி கணபதி பூஜை உடன் கொடியேற்றப்பட்டது. மாலையில் யாகசாலை பூஜை நடந்தது. முருகப்பெருமான் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். நேற்றும், நேற்று முன்தினமும், யாகசாலை பூஜை நடந்தது. சுவாமி உட்பிரகார உலா நடந்தது. இன்று (10-ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 11ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார்.காலை 10:30 மணிக்கு தேரோட்டம் துவங்கி நடைபெறுகிறது. குமாரபாளையம் ஜமாப் குழு இசை, மோளகாளி பாளையம் பாலமுருகன் காவடியாட்டம் மற்றும் கயிலை வாத்திய இசை தேரோட்டத்தில் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் கும்மியாட்டம் நடைபெறுகிறது.