உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை விடுமுறையில் குழந்தை திருமணம்! சிதைக்கப்படும் எதிர்காலம்; கண்காணிப்பில் தேவை தீவிரம்

கோடை விடுமுறையில் குழந்தை திருமணம்! சிதைக்கப்படும் எதிர்காலம்; கண்காணிப்பில் தேவை தீவிரம்

கோவை: பள்ளி படிப்பு முடிக்கும் மாணவியருக்கு கோடை விடுமுறையில் குழந்தை திருமணத்துக்கு அதிக வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் கிராமங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.நம் நாட்டில் பெண்களின் திருமண வயது, 18 என்றும், ஆண்களின் திருமண வயது, 21 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணமாகவும், சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.இதை தடுக்க, மத்திய அரசால், 2009ம் ஆண்டு முதல் குழந்தை திருமண தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அளவில் அதிக குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களில் கோவை மாவட்டமும் ஒன்று.

குழந்தை திருமணம் தடுப்பு

பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டாரங்களில் தலா, 15 குழந்தை திருமணங்கள் கடந்தாண்டு நடந்துள்ளன. மாவட்டத்தில் மட்டும், 37 குழந்தை திருமணங்களை தகவலின் பேரில், மாவட்ட சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.அதேசமயம், 97 குழந்தை திருமணங்கள் நடந்து, வழக்குகள் பதியப்பட்டன. இந்தாண்டு பிப்., மாதத்தில், 17 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இத்திருமணம் அதிகமாக நடப்பது வேதனைக்குரியது.இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி படிப்பை முடிக்கும் மாணவியர் தான். அவர்களது எதிர்காலம் சிதைவதுடன், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'தற்போது, பிளஸ்2, பிளஸ்1 பொதுத் தேர்வு முடியும் தருவாயில் உள்ளது. 10ம் வகுப்புக்கு இம்மாத இறுதியில் துவங்கி ஏப்., 15 வரை நடக்கிறது. தேர்வு முடிந்து கோடை விடுமுறையான ஏப்., மே., மாதங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என்றனர்.குழந்தை திருமணம் குறித்து, 1098, 181, 100 ஆகிய அவசர எண்களில் புகார் அளிக்கலாம் என, மாவட்ட சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

ரூ.2,000 வெகுமதி!

கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில்,''காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஆனைமலையில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. பள்ளி படிப்பை முடிக்கும் மாணவியருக்கு இத்திருமணம் நடப்பதை தடுக்க, கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தி, குறிப்பாக கோடை விடுமுறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. குழந்தை திருமணம் குறித்து முன்னதாகவே உண்மை தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை