உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகள் பாதுகாப்பு பணி பாதிப்பு! நலக்குழு உறுப்பினர்கள் இல்லாததால்..

குழந்தைகள் பாதுகாப்பு பணி பாதிப்பு! நலக்குழு உறுப்பினர்கள் இல்லாததால்..

கோவை: கோவை மாவட்டத்தில் கலைக்கப்பட்ட குழந்தை நலக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது .மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் கீழ் குழந்தை நலக்குழு செயல்படுகிறது. இந்நிலையில், குழந்தை நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் விடுதியில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததால் கடந்த மார்ச் மாதம் இந்த குழு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழு கலைக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. ஈரோடு மாவட்ட குழந்தை நலக்குழுவினருக்கு, கோவை மாவட்டத்தையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பணிகளில் தாமதம்

குழந்தைகள் உதவி மையங்களுக்கு வரும் அவசர அழைப்புகளை கையாளுதல்; போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் ஆலோசனை வழங்குதல் மற்றும் நிவாரணத் தொகைக்கு பரிந்துரைத்தல்; ரயில் நிலையங்களில் மீட்கப்படும் குழந்தைகள், ஆதரவற்ற மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்பான காப்பகங்களுக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு பணிகளை குழந்தை நலக் குழுவினர் கவனிக்கின்றனர். தற்போது, இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், கல்வி மற்றும் பராமரிப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், ''மாநிலத் தேர்வுக் குழு மூலமே உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். பணிகள் பாதிக்காத வகையில் தற்போது ஈரோடு மாவட்டக் குழுவினர் சுழற்சி முறையில் கவனித்து வருகின்றனர்,'' என்றார். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''ஈரோட்டிலிருந்து கோவை வர குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அவசர சூழ்நிலைகளில் இது பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட காப்பகங்கள் உள்ள நிலையில் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம். மேலும், ஈரோடு குழுவினருக்கு சுமை அதிகரிப்பதால் இரண்டு மாவட்டங்களிலும் பணிகள் தொய்வடையும் அபாயம் உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடியாக புதிய உறுப்பினர்களை நியமித்து குழுவை முழு திற னுடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை