உள்ளூர் செய்திகள்

சிட்டி க்ரைம் 

தகராறு செய்தவர்கள் கைது

சிங்காநல்லுார் போலீசார், இருகூர் சுங்கம் மைதானம் அருகில் ரோந்து சென்ற போது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இருவர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் சண்டை போட்டதற்காக வரதராஜபுரம், நேரு நகரை சேர்ந்தவர் தனசேகர், 39, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் மாரிமுத்து, 35 ஆகியோரை கைது செய்தனர்.

லாட்டரி விற்றவர்கள் கைது

கேரள லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக கொண்டு வந்து, கோவையில் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வடவள்ளி போலீசார் ரோந்து சென்ற போது, சோமையம்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சின்னதடாகத்தை சேர்ந்த பிரபாகரன், 49 என்பவரை கைது செய்தனர். அதே போல், பீளமேடு போலீசார் மேற்கொண்ட சோதனையில், காளப்பட்டியை சேர்ந்த பாலன், 38 என்பவர் லாட்டரி விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

பேனர் வைத்தவர் கைது

சாய்பாபா காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட, கே.கே.புதுார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி எதிரில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்ததில் பேனர் வைத்தது, பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தை சேர்ந்த அருண் சத்யா, 30 என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நடந்து சென்றவரிடம் வழிப்பறி

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப், 43. இவர் கோவை கணபதி வரதராஜூலு நகரில் வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மது போதையில் எப்.சி.ஐ., சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்றார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொழிலாளியை தாக்கிய வாலிபர்கள்

செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 40; லோடுமேன். கடந்த, 13ம் தேதி செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானா அருகில் உள்ள பெட்டிக்கடை முன் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு மது போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த வாலிபர்களை, தட்டிக்கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஆனந்த், 26 மற்றும் தினேஷ், 25 ஆகியோர் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். காயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்கள் கைது

ராமநாதபுரத்தை சேர்ந்த எட்வின் பிரான்சிஸ், 29. இவர் நேரு நகர் காளப்பட்டி ரோட்டில் தோசை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரின் கடைக்கு ஜெயகுமார், 21, முருகேசன், 21, சஞ்சய், 18 ஆகியோர் சாப்பிட வந்தனர். சாப்பிட்ட பிறகு எட்வின் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர முடியாது என தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூவரும் சேர்ந்து எட்வினை தாக்கியுள்ளனர். எட்வினின் புகாரில், பீளமேடு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

பசுமாடு திருட்டு

காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி, 63. மாடு வளர்த்து வருகிறார். தினமும் தனது இரு மாடுகளையும் ஸ்ரீ ராம் நகரில் உள்ள ஒரு இடத்தில் கட்டி வைப்பது வழக்கம். கடந்த 11ம் தேதி தனது மாடுகளை கட்டி வைத்து விட்டு சென்றார். மறுநாள் காலை, ஒரு மாடு திருட்டு போயிருந்தது. பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா பறிமுதல்

வடவள்ளி, கஸ்துாரிநாயக்கன்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பவித்ரன், 22 என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ