உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம் 

செல்போன் கடையில் திருட்டு

ரத்தினபுரியை சேர்ந்த ஜஸ்டின், 40; அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 26ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் அவரது கடை திறந்து இருப்பதாக கிடைத்த தகவலை கேட்டு கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மொபைல்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு போயிருந்தது. இதையடுத்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பைக் மோதி பெண்பலி

தமிழ்நாடு வேளாண் பல்கலை, டேங்க்பேட்டை லேன் பகுதியை சேர்ந்தவர் விஜயா, 53. இவர் பி.என்., புதுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் விஜயா மீது மோதியதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

செல்வபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டைமண்ட் பேக்டரி அருகில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை செய்த போது 1.5 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா வைத்திருந்த கரும்புக்கடையை சேர்ந்த அனீஸ் ரகுமான் என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ