முதல்வர் கோப்பை கூடைப்பந்து; காலிறுதிக்கு முந்தைய சுற்று துவக்கம்
கோவை : முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்று துவங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது.பள்ளி மாணவர்களை தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. மூன்றாம் நாளான நேற்று, ஆண்கள் பிரிவில், தர்மபுரி அணி, 66-47 என்ற புள்ளி கணக்கில் நீலகிரி அணியையும், கன்னியாகுமரி அணி, 73-40 என்ற புள்ளி கணக்கில், நாமக்கல் அணியையும் வீழ்த்தியது.தொடர்ந்து, சேலம் அணி, 70-30 என்ற புள்ளி கணக்கில் கடலுார் அணியையும், விழுப்புரம் அணி, 65-42 என்ற புள்ளி கணக்கில், ராமநாதபுரம் அணியையும் வென்றது. பெண்கள் பிரிவில், தேனி அணி, 56-50 என்ற புள்ளி கணக்கில், திருநெல்வேலி அணியை வென்றது.விருதுநகர் அணி, 61-19 என்ற புள்ளி கணக்கில் திருவண்ணாமலை அணியையும், தென்காசி அணி, 56-41 என்ற புள்ளி கணக்கில் பெரம்பலுார் அணியையும், நாமக்கல் அணி, 78-39 என்ற புள்ளி கணக்கில் சிவகங்கை அணியையும் வென்றது. தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.