ரூ.250 கோடிக்கு தென்னை தொகுப்பு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
கோவை; தேசிய தோட்டக்கலை வாரிய மானிய உதவியுடன், தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம், கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி பகுதியில் தென்னை தொகுப்பு வளர்ச்சி திட்டம் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.உற்பத்திக்கு முந்தைய செயல்கள் மற்றும் உற்பத்தி செய்தல், அறுவடைக்கு பின் மற்றும் மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், பிராண்டிங் மற்றும் விற்பனை தளவாடங்கள் உருவாக்குதல் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். 250 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 100 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.ஆர்வமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், நிறுவனத்தார், மூன்று பிரிவுகளில் உள்ள பணிகளை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திட்ட அறிக்கை சமர்ப்பித்து பங்கேற்கலாம். www.tnhorticulture.tn.gov.inமற்றும் www.nhb.gov.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஜூன், 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம், என, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.