உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாம் ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு நிறைவு

இரண்டாம் ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு நிறைவு

கோவை : ஸ்ரீமத் ராமானுஜ மற்றும் ஸ்ரீரங்க ராமானுஜம் பகவத் பாகவத கைங்கர்ய சபை இணைந்து நடத்தும் இரண்டாம் ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு மற்றும் ஆண்டு விழா ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.ஸ்ரீ ஹரி நாம சங்கீர்த்தன கோஷ்டியினரின் ஊர்வலம் காலை சித்தாபுதூர் ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ராமகிருஷ்ணா திருமண மண்டபம் அடைந்தது. ஸ்ரீ ரங்கராமானுஜம் பகவத் பாகவத கைங்கர்ய சபை செயலாளர் செல்வபதி வரவேற்றார். ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் சந்நிதி தர்மகர்த்தா துரைசாமி துவக்கி வைத்தார். ஸ்ரீ வேணுகோபால சுவாமி சந்நிதி, யாமுனாசார்யர் மஹா சுதர்சன ஹோமம் நடத்தினார். திருவரங்கம் ஸ்ரீ வைஷ்ணவ கிருஷ்ணமாசார்யர் பேசுகையில்,''கிருஷ்ணதேவராயரின் ஆளுமை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலும் பரவியிருந்தது. இந்து மதத்தின் புகழை எடுத்துரைக்கும் வகையில் அவரின் சிற்பக் கலை இன்றும் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. திருவரங்கம், திருமலை, ஹம்பி உள்ளிட்ட பகுதிகளில் அவரின் சிற்பக்கலை அதிகளவில் உள்ளது. கோவில்களை கட்டுதல் முதல் கவிஞராக பல்வேறு காவியங்கள் இயற்றியது வரை அவரது புகழ் பரவியுள்ளது. அவ்வகையில் கிருஷ்ணதேவராயரின் திருப்பணிகள் எண்ணற்றவை,'' என்றார்.மாலையில், ஆண்டாள் திருக்கல்யாணம் எனும் தலைப்பில் சவுபாக்யலட்சுமி, ஸ்ரீ சடகோபன் திருநாராயண சுவாமி திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீமத் ராமானுஜ பகவத் பாகவத கைங்கர்ய சபை தலைவர் சுப்பையன் நன்றி கூறினார். மாலையில், பண்டைக்குலமும் தொண்டக்குலமும் எனும் தலைப்பில் சென்னை கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாச நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி