உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீதிபதிகள், வக்கீல்கள் "நீதி ரதத்தின் இரு சக்கரங்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேச்சு

நீதிபதிகள், வக்கீல்கள் "நீதி ரதத்தின் இரு சக்கரங்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேச்சு

கோவை : 'நீதிபதிகள், வக்கீல்கள் இருவரும் 'நீதி ரதத்தின் இரு சக்கரங்களை போன்றவர்கள்,' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேசினார்.கோவை வக்கீல்கள் சங்கம் 'சி.ஏ.ஏ.' சார்பில் 'நீதிபதி செங்கோட்டுவேலன் அட்வகேட்ஸ் அகாடமி' துவக்க விழா மற்றும் 'மூத்த வக்கீல்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா', குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை ஜி.கே.டி., அரங்கில் நேற்று நடந்தது.விழாவில், கோவை வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் 'நீதிபதி செங்கோட்டுவேலன் அட்வகேட்ஸ் அகாடமியை' துவக்கி வைத்தார். மூத்த வக்கீல்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் விருது பெறுவோர் குறித்து, மூத்த வக்கீல் நாகசுப்ரமணியம் பேசினார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மூத்த வக்கீல்கள் கனகசபாபதி, சுப்பிரமணியம் (அவர் சார்பில் அவரது மகன் வக்கீல் ராமரத்தினம் பெற்றுக்கொண்டார்), மயில்சாமி, ராமச்சந்திரன், ரமணி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பை விரைவில் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் இல்லாவிட்டால் உயிர் இல்லாத மனித உடலுக்கு சமம். வக்கீல்கள் தங்களுக்குள்ள பிரச்னைகளை சங்க நிர்வாகிகள் மூலம் மாவட்ட நீதிபதியிடமோ, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கோர்ட் புறக்கணிப்பு, போராட்டம் உள்ளிட்டவற்றை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.தேவையில்லாமல் வாய்தா பெறுவதை வக்கீல்கள் தவிர்க்க வேண்டும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டிய பொறுப்பு நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் உள்ளது.காலை 10.30 முதல் மாலை 4.00 வரை நடக்கும் நிகழ்வுகள் மற்றும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்ற இணையதள முகவரியில் அன்றைய தினம் மாலை 5.00 மணி முதலே காணலாம். இவ்வாறு, நீதிபதி சதாசிவம் பேசினார்.சென்னை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் பேசுகையில் கோவையில் துவக்கப்பட்டுள்ள வக்கீல்கள் பயிற்சிக் கூடம் போல் முந்தைய காலங்களில் ஏதும் செயல்படவில்லை. இருப்பினும் வரலாற்று சிறப்பு மிக்க பல நல்ல தீர்ப்புகள் அன்றைய காலகட்டத்தில் நீதிபதிகள் வழங்க, வக்கீல்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஒரு நாளில் 16 மணி நேரம் படிப்பதற்கு வக்கீல்கள் நேரத்தை செலவிட வேண்டும். கோர்ட் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.விழா மலரை சென்னை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் வெளியிட தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் அருணாச்சலம் பெற்று கொண்டார். தலைமை நீதிபதி இக்பால் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜோதிமணி, மாவட்ட நீதிபதிகள் சொக்கலிங்கம், ஜெயச்சந்திரன், பிரேம்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். கோவை வக்கீல்கள் சங்க செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை