கோவை : வெளியூரில் இருந்து பெரிய வெங்காயம் வராது என்ற நோக்கில், உள்ளூர் வெங்காயம் அதிகளவு வந்தால், விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டது. சுங்க வரிவிதிப்பு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18ம் தேதி நள்ளிரவு முதல் லாரி ஸ்டிரைக் நடக்கிறது. இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு, ஒரு சில சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கோவை நகரில் நேற்று கணிசமான அளவில் லாரிகள் ஓடின. நேற்றுமுன்தினம் லாரிகளின் ஸ்டிரைக்கால், கோவை காய்கறி மார்க்கெட்டில் இங்கிலீஷ் காய்கறியில் விலையேற்றம் ஏற்பட்டது. லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால், ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவியது. ஆனால், டெம்போ, மினி ஆட்டோ மூலம் அதிகளவு காய்கறி எடுத்து வரப்படுகிறது. தற்போது, விளைச்சல் அதிகரித்து 'சம்பல்' காலம் என்பதால், காய்கறியை நிறுத்தி வைக்கும் சூழலில் விவசாயிகள் இல்லை. ஒரு கிலோ கேரட் 24 ரூபாய்; பீன்ஸ் 20; தக்காளி 8-10; பெரியவெங்காயம் 18-20; சின்னவெங்காயம் 16-20; கோஸ் 10; பச்சை மிளகாய் 20; பீட்ரூட் 10; முருங்கை 12; இஞ்சி பழையது 40, புதியது 15; கத்தரி 12-16; அவரை கிலோ 20 ரூபாய் என, தியாகி குமரன் மார்க்கெட்டில் சில்லரை விற்பனை இருந்தது. மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில், நூற்றுக்கணக்கான பெரிய வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியது: வெளியூரில் இருந்து வரும் காய்கறியில், பெரிய வெங்காயம் முக்கியமானது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில், பெரிய வெங்காயம் சீசன் உள்ளது. தற்போது, பல்லடம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சீசன் துவங்கியுள்ளது. வெளியூர் வெங்காயம் வராது என்ற நோக்கில், பல்லடம் பகுதியில் இருந்து உள்ளூர் வெங்காயம் 100 டன் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், மகாராஷ்ராவில் இருந்து 320 டன் பெரிய வெங்காயம் நேற்று (நேற்றுமுன்தினம்) விற்பனைக்கு வந்தது. எதிர்பாராத வரவால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா வெங்காயம் ஏறத்தாழ கேரளாவிற்கு சென்றுவிட்டது. உள்ளூர் வெங்காயம் அதிக நாட்கள் தாங்காது. மகாராஷ்டிரா வெங்காயத்தை விட, உள்ளூர்வெங்காயம் குறைவான விலைக்கு விற்கும். உள்ளூர்வெங்காயம் ஓரிருநாளில் விற்றுவிடும். தக்காளி சீசன் துவங்கி, வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வழக்கமான தேக்கம் ஏற்பட்டுள்ளது, என்றார்.