பதிவு பெறாத விடுதிகள், இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
கோவை: கோவையில் அனுமதியின்றி விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் மகளிர்விடுதி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் பதிவு பெற்ற முதியோர் இல்லங்கள், மகளிர்விடுதிகள், ஆதரவற்றோர் விடுதிகள் உள்ளன. இவை தவிர சில இடங்களில் அனுமதிபெறாமல் விதிமுறைகளுக்கு புறம்பாக விடுதிகள் செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன. அனுமதியின்றி விதிமுறைக்கு புறம்பாக விடுதி களும், முதியோர் இல்லங்களும் செயல்படக்கூடாது. முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள், மகளிர் விடுதிகள், பெண் குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் அனைத்தும் தமிழ்நாடு விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் அரசாணை நிலை எண் 83ன் படியும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை உத்தரவின் படி சமூகநலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். விடுதிகள் போதிய இடவசதியுடனும், காற்றோட்ட வசதியுடனும் சுற்றுப்புற சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் மகளிர் விடுதி, முதியோர் இல்லங்கள் பதிவு செய்ய வேண்டும், அவற்றை தவறாமல் புதுப்பிக்க வேண்டும். பெற்ற அனைத்து சான்றுகளையும் விடுதிகளில் பார்வைக்கு வைக்க வேண்டும். பதிவு செய்யாத விடுதி, இல்லம் அனைத்தும் SimplyGov Portal (https://www.tnesevai.tn.gov.in/Citizen/Portallogin) இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பவன்குமார் கூறினார்.