சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுக்கணும்! மனு கொடுத்து மக்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி; 'குள்ளக்காபாளையம் எம்.ஜி.ஆர்., நகரில் சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.குள்ளக்காபாளையம் எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் எம்.ஜி.ஆர்., நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு மதுரை வீரன் கோவில் அருகே உள்ள காலியிடத்தில், சமுதாய நலக்கூடம் கட்டித்தருவதாக கூறப்பட்டது.தற்போது, அந்த இடத்தை தனிநபருக்கு சொந்தமென்று கூறி வீடு கட்டுவதற்காக ஏற்பாடு செய்துள்ளார். எனவே, அந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யுங்க!
மரப்பேட்டை வீதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், மரப்பேட்டை வீதியில் வணிக கட்டடங்கள், குடியிருப்புகள் உள்ளன. சிலர், உள்நோக்கத்துடன் செயல்பட்டு தனியார் வங்கியில் கடன் பெற்றது போல் சித்தரித்து, கடைகள் மற்றும் வீடுகளுக்கு 'சீல்' வைக்க நீதிமன்றம் வாயிலாக உத்தரவு பெற்றுள்ளனர்.இந்த இடத்துக்கு நீண்ட காலமாக பத்திரம் மட்டுமே உள்ளது. எனவே, எதன் அடிப்படையில் கடன் கொடுத்தனர் என தெரிய வேண்டும். கடந்த, 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் பெயரிலேயே வீடுகளுக்கு உரிய வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு அனைத்தும் உள்ளது. எனவே, இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது. வடிகால் தேவை
பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி அண்ணா நகர் சுவாமி ஐயப்பா லே-அவுட் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:சுவாமி ஐயப்பா லே - அவுட்டில் கடந்த, 15 ஆண்டுகளாக வசிக்கிறோம். இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதியில்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. பலமுறை நகராட்சியில் முறையீட்டும் இதுவரை எவ்வித பலனும் இல்லை.மழை காலங்களில் கழிவுநீரானது வீட்டுக்குள்ளும், குடிநீர் தொட்டியிலும் கலக்கிறது. கழிவுநீர் தேங்குவதால் வீட்டின் சுவர்களும் இடியும் நிலையில் உள்ளது. எனவே, வடிகால் அமைத்து கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றுங்க!
ஆழியாறு, நெல்லித்துறை மன்னம் பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:ஆனைமலை, ஆழியாறு கிராமத்தில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த செப்., மாதம் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், நில நிர்வாக ஆணையர், சப் - கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சர்வே, சப் - டிவிஷன் செய்தல், நிலவகை மாற்றம் செய்வது, பட்டா மாறுதல் செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறோம்.விதிமீறல்கள் உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், ஒப்படைப்பு நிலங்கள் ரத்து செய்து நிலமீட்பு செய்யும் பணிகளை மேற்கொண்டு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களான மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். எனவே, அடிப்படை உரிமையான வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, வலியுறுத்தி உள்ளனர்.